தமிழி எழுத்துகள்-14

தமிழி எழுத்துகள்-14

தொண்டூர் தமிழி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ளது தொண்டூர். இவ்வூரில் உள்ள "பஞ்சனார் படி" எனும் மலைக்குன்றில் உள்ள குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டு உள்ளது. 1991 ம் ஆண்டு தொல்லியல்துறை அலுவலர் சந்திரமூர்த்தி அவர்களால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது.

கல்வெட்டு:

(இ) ளங்காயிபன் ஏவ அகழ்ஊரறம்
மோசி செய்த அதிடானம்.

இவ்வாக்கியத்தின் இறுதியில் மூன்று கோடுகள் காட்டப்பட்டுள்ளது. இது படுக்கைகளின் எண்ணிக்கையை குறிப்பதாய் இருக்கலாம். இளங்காயிபன் என்பவர் பணிக்க(ஏவ) அவரது ஆணைப்படி அகழூரினர் இந்த அறத்தை செய்கின்றனர். படுக்கை அல்லது இருக்கை(அதிடானம்) அமைத்தவர் மோசி என்பவராவார். 

இளங்காயிபவன் என்பவரை ஆசிவகராய் இருக்கலாம் என நெடுஞ்செழியன் கருதுகிறார். இன்றும் தொண்டூர் அருகே அகலூர் எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
மோசி எனும் பெயர் புறநானூற்றிலே கூட வருகிறது! "திருந்துமொழி மோசிபாடிய ஆயும்" (புறம்-158)

இதன் காலம் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு.

புகைப்பட உதவி: வரலாற்று விரும்பிகள் சங்கம்




தமிழி எழுத்துகள்-13

தமிழி எழுத்துகள்-13

குன்னக்குடி தமிழி:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் அமைந்துள்ளது ஊர் குன்னக்குடி, இங்குள்ள குகைத்தளத்தில் 'ஞானியர்மடம்' என்ற சிறுமண்டபமும் பிற்காலத்திய முனிவர் சிலையும் உள்ளது. இதில் வெட்டப்பட்ட நீர்வடி முகப்பில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளது. 1909 ம் ஆண்டு இக்கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டது.

முதல் கல்வெட்டு:

காபிஊர் ஆதன்சாத்தன்

விளக்கம்:

காபிஊர்=காப்பியம்+ஊர் இன்றும் கூட சீர்காழியருகே காப்பியங்குடி எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது! காப்பியம் என்பது குடிப்பெயர் ஒன்றாய் கருத இடமுள்ளது. காப்பியாற்று காப்பியனார். காப்பியன் சேந்தனார்.போன்ற புலவர்களின் பெயர்களை இதற்கு உதாரணமாய் கொள்ளலாம். காப்பியங்குடி என்பதே காப்பிஊர் என மாறியிருக்கக்கூடும். காப்பிஊரை சேர்ந்த ஆதன் சாத்தன் எனும் பெயர் மட்டும் உள்ளது. அவர் இந்த குகைத்தத்தின் நீர்வடியை ஏற்ப்படுத்தியவராய் இருக்கலாம். ஆதன் எனும் பெயர் அன்று பரவலாய் தமிழகமெங்கும் பயின்று வந்துள்ளது! இக்கல்வெட்டு தலைகீழாய் வெட்டப்பட்டுள்ளது. 

இரண்டாம் கல்வெட்டு:

ஊறு  து..

விளக்கம்:

ஊற்று ஒன்றினை ஏற்ப்படுத்தாயவர் பெயர் வந்துள்ளதை யூகிக்கலாம். ஆனால் அதற்கடுத்த எழுத்துகள்
சிதைந்துள்ளதால் முழுமையாக கூறமுடியவில்லை. இவ்விரு கல்வெட்டும் கி.பி 3 ம் நூற்றாண்டாகும்.

கல்வெட்டு படஉதவி: Saravana Manian P A






தமிழி கல்வெட்டுகள்-12

தமிழி கல்வெட்டுகள்-12

திருவாதவூர் தமிழி:

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திலுள்ளது திருவாதவூர். சைவசமய குரவரான மாணிக்கவாசகர் அவதரித்த ஊர் இது. இவ்வூர் பெயராலேயே அவர் "திருவாதவூரார்" என அழைக்கப்படுகிறார்.
இந்திய கல்வெட்டு அறிக்கை 1965-1966 ல் வெளிவந்துள்ளது இக்கல்வெட்டின் அறிக்கை, அதன்பின் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் 1996 ல் மீண்டும் மறுஆய்வு செய்தார்.
இரு கல்வெட்டுகள் இங்கு வெட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கே பாறை ஓவியமும் உள்ளது. செஞ்சாந்து நிறத்தில் வட்டவட்டமாய் சுருள் வடிவில் நிறைய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இவ்வகை ஓவியம் உகாண்டா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காணப்படுவது சிறப்பான ஒன்று.

கல்வெட்டு 1:
"பாங்காட அர்இதன் கொட்டுப்பிதோன்"

பாங்காடு என்ற ஊரை சார்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். திருவாதவூருக்கு அருகே 'பனங்காடி' எனும் ஊர் உள்ளது! இவ்வுரே பாங்காடு எனும் ஊராய் இருந்திருக்கலாம்.

கல்வெட்டு 2:
"உபசன் பர்அசு உறை கொட்டுப்பிதோன்"

பரசு என்ற உபசரால் இந்த குகைத்தளம் குடைவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். உபசன் என்றால் உபாத்யாசான், சமயஆசிரியர் என பொருள்படும். பல்லவ, சோழ காலத்தில் வாத்தியம் வாசிப்பவராய் இருந்துள்ளனர். திருவாய்மொழியில் 'பரசுதல்'எனும் சொல் பாடுதல் எனும் பொருளில் வருகிறது.

இவ்விரு கல்வெட்டுகளின் காலம் கி.மு இரண்டு என கணிக்கப்பட்டுள்ளது.




தமிழி கல்வெட்டுகள்-11

தமிழி கல்வெட்டுகள்-11

பெருமாள்மலை தமிழி:

மதுரை மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது முத்துப்பட்டி இங்குள்ள மலை பெருமாள்மலை, கரடிப்ட்டிமலை என அழைக்கப்படுகிறது!  1910 ம் ஆண்டு இங்கு மூன்று கல்வெட்டுகள் அறியப்பட்டன,எனினும் இரண்டே படிக்கும் நிலையில் உள்ளது. குகையின் முகப்பில் இரு தீர்த்தங்கரர் சிலை புடைப்புச்சிற்பமாய் உள்ளது. படுக்கையில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பமும் உள்ளது.

முதல் கல்வெட்டு:
நாகபேரூதைய் முசிறி கோடன் எளமகன்

விளக்கம்:

சேரநாட்டு கடற்கரை பட்டினமான முசிறியிலிருந்து இளமகனான கோடன் என்பவரின் கொடை என பொருள்கொள்ளலாம். கேரளத்தின் பட்டணம் எனும் ஊரில் நடந்த அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புள்ள பானைகள் கிடைத்தது. அவ்விடமே முசிறியாய் கருதப்படுகிறது! இதில் வரும் எளமகன் எனும் சொல் இளமகன் அல்லது இளையர் என பொருள் கொள்ளலாம். இளையர் என்பதற்கு போர்வீரன், எனப்பொருள் இச்சொல் பல்லவர் நடுகற்களில் பயின்று வருகிறது. நாகபேரூர் அருகேயுள்ள நாகமலைபுதுக்கோட்டையை குறிப்பதாய் இருக்கலாம். இப்பெயர் வேள்விக்குடி செப்பேடிலும் வருகிறது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கல்வெட்டு:

சைய்அளன் விந்தைஊர் கவிய்

விளக்கம்:

விந்தையூரை சேர்ந்த சைய்அளன்(அலாகாபாத் தூண் கல்வெட்டில் இப்பெயர் வருகிறது) என்பவர் அமைத்துக்கொடுத்த குகை என்பது இதன் பொருள்,இயற்கையாய் அமைந்த குகையை இவர் பதனிட்டு கொடுத்தாருக்கலாம்.கெவி என்பதற்கு குகை என ஒருபொருளும் உண்டு! இன்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் குகையை மக்கள் இவ்வாறு அழைப்பதுண்டு!

மூன்றாம் கல்வெட்டு:

திடிக் காத்தான்.... மன...(எ)ய்

விளக்கம்:

திடியன் என்ற குன்றுள்ள ஊரைச்சார்ந்த காத்தான் என்பவனின் கொடையே இந்த கற்படுக்கை என கூறலாம்.







தமிழி எழுத்துகள்-10

தமிழி எழுத்துகள்-10

மாமண்டூர் தமிழி:

திருவண்ணாமலை மாவட்டம், காஞ்சி-வந்தவாசி சாலையிலுள்ள ஊர் மாமண்டூர். 1939 ல் இங்கு தமிழி எழுத்து இருப்பதை கண்டறிந்தனர். இங்குள்ள சிறிய குன்றின் குகைத்தளத்தின் முகப்பில் இக்கல்வெட்டு அமைந்துள்ளது.  

கல்வெட்டு:

கணிமான்
தேனூர் தந்த கோன்குன்று ஆசி
செயிதான் தசன் சிறு
...........வன்

விளக்கம்:

சிற்றரசர்களை குறிக்கும் தமிழி எழுத்துகளில் இதுவும் ஒன்று. இதில் முதன்முதலாய் கல்வெட்டை வெட்டிய தச்சனின் பெயரும் வருகிறது! 
தேனூரை கைப்பற்றிய தலைவனான(கோன்) கனிமான் என்பவனுடைய குன்று இது. இதில் பந்தல் அமைத்து தங்கும் வசதி(ஆசி) செய்த தச்சன்(தசன்) சிறு...வன் என்பவர் ஆவர். இன்றும் பந்தல் அமைக்க அன்று ஏற்படுத்திய துளைகளுக்கு கீழேதான் கல்வெட்டு உள்ளது. சிறு எனும் வார்த்தைக்கு இடையேயுள்ள கல்வெட்டு தேய்ந்ததால் இச்சிற்பியின் பெயரை அறியமுடியவில்லை.

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், கானப்பேர் தந்த உக்கிரபெருவழுதி என்ற பாண்டிய மன்னர்கள் குறித்து சங்கஇலக்கியம் பாடுகிறது. இதில்வரும் "தந்த" எனும் சொல் வெற்றிபெற்ற எனும் பொருளில் வருகிறது. அதேபோல் இக்கல்வெட்டிலும் "தேனூர் தந்த கோன்" குறித்து குறிப்புவருவதை அறியலாம். இக்கல்வெட்டின் காலம் கி.பி 3ம் நூற்றாண்டாகும்.

P.c : Thiyagarajan Ekambaram





தமிழி கல்வெட்டுகள்-09

தமிழி கல்வெட்டுகள்-09

திருப்பரங்குன்றம் தமிழி:

மதுரைநகரிலிருந்து தென்பகுதியில் 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மலை. இம்மலையின் உயரமான பகுதியில் ஓர் குகைத்தளம் உள்ளது. 1908 ம் ஆண்டு ஒரு கல்வெட்டும், 1950-51ல் இரண்டு கல்வெட்டும் கண்டறியப்பட்டன. 

முதல் கல்வெட்டு:

அந்துவன் கொடுபிதவன்

விளக்கம்:

அந்துவன் என்பவர் இக்கற்படுக்கையை கொடுத்தவர் என்பது பொருள். அந்துவன் என்ற பெயரில் சங்ககால புலவர்கள் இருந்துள்ளனர். சில பானைஓடுகளிலும் இப்பெயர் கிடைக்கிறது. இக்கல்வெட்டு கற்படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் அமைந்துள்ளது! 

இரண்டாம் கல்வெட்டு:

மாராயது கய(ம்)

விளக்கம்:

மாராயம் என்பது மன்னரால் வழங்கப்பட்ட ஓர் உயரிய பதவியாகும். ராஜேந்திரசோழனுக்கு கூட "பஞ்சவன் மாராயன்" எனும் பெயர் ராஜராஜனால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கயம் என்பதற்கு குளம் என்பது பொருள். மாராயன் ஒருவரால் வழங்கப்படௌட குளம் போன்ற நீர்நிலையை குறிக்கும். இத்தமிழி கல்வெட்டு இருக்கும் இடத்தில் ஓர் சுனை ஒன்று காணப்படுகிறது, அதில் நடந்து உள்ளே செல்ல படிக்கட்டும் உள்ளது. இது அவரின் கொடையாய் இருக்கலாம்.

மூன்றாம் கல்வெட்டு:

எரு காடுர் இழ குடும்பிகன் போலாலயன்  செய்தா ஆய்சயன் நெடுசாதன்

விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி குடைவரையில் 4-5 ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது, அதில் "எக்காடூர்" எனும் பெயர் வருகிறது! மேலும் சங்க இலக்கியமான புறநானூரில் எருகாடூர் தாயங்கணார் எனும் புலவர் பெயர் வருகிறது! எக்காடூரும், எருகாடுரும் ஒன்றாய் இருக்க வாய்ப்புள்ளது. இக்கல்வெட்டில் வரும் எருகாடூரும் அதுவே. இழ என்பதனை ஈழ(கள் இறக்கும் குடியினர்) என்றும் குடும்பிகன் என்பதற்கு குடும்பத்தலைவன் எனவும் பொருள் காணப்பட்டு, கள்இறக்கும் குடும்பத்தின் தலைவன் என ஐராவதம் மகாதேவன் முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர். போலாலயன் என்பது கொடையாளியின் பெயர் ஆய்சயன நெடுசாதன் என்பது அவரது இயற்பெயராய் கூறப்படுகிறது.






தமிழி எழுத்துகள் -08

தமிழி எழுத்துகள் -08 கொங்கர் புளியங்குளம்: மதுரை-தேனி சாலையில் செக்கானூரணிக்கு அருகேயுள்ளது கொங்கர்புளியங்குளம். தமிழி Siteகளில் அதிகம் கற்படுக்கைகள் அமைந்தது இங்கேதான். அனைத்து படுக்கைககளும் நன்றாய் வழவழப்பாய் இழைத்து செதுக்கப்பட்டுள்ளது. 1910 ம் ஆண்டு இங்கு கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். இங்கு மொத்தம் மூன்று தமிழி கல்வெட்டு உள்ளது. தமிழிகல்வெட்டுக்கு பக்கவாட்டில் கொஞ்சம் தொலைவில் ஒரு சமண தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. குகைத்தளத்தில் குறுகலான இடத்தில் சில பாறைஓவியங்களும் காணப்படுகிறது. கல்வெட்டுகள்: முதலாம் கல்வெட்டு: குற கொடுபிதவன் உபசஅன் உபறுவஅ(ன்) விளக்கம்: குற என்பதனை "கூரை", "கூறு(பகுதி)" எனபொருள் கொள்ளப்படுகிறது. கொடுபித என்பதனை கொட்டுபித்தவன், இந்த படுக்கைகளை கொடுத்தவன் எனவும், உபசஅன் என்பதனை உபாசன் என்ற ஆசிரியராகவும் பொருள் காணப்படுகிறது! உபறுவன் என்பதற்கு கிணறு, குளம் தோண்டும் பணியாளரை குறிக்கும் சொல் எனவே, உபாசனாகிய உபறுவன் கொடுத்த தானமாய் அளித்தது இக்கூரை என பொருள் கொள்ளலாம். இன்று அக்கூரை இல்லை. இரண்டாம் கல்வெட்டு: குறு கொடல்கு ஈத்தவன் செற்அதன்(ஒ)ன் விளக்கம்: செற்அதன் Or செராதன் இப்பகுதியை குடைவிப்பதற்கு தானமளித்ததை கல்வெட்டு கூறுகிறது. இறுதியில் ஓர் குறியீடு உள்ளது. இதனை பொன்னின் எடையை அல்லது எண்ணைக்குறிப்பதாய் கருதப்படுகிறது! மூன்றாம் கல்வெட்டு: பாகன் ஊர் பே(ர)தன்பிடன் இத்த வெபொன் விளக்கம்: பாகனூரைச் சேர்ந்த பிட்டன் என்பவர் அளித்த வெண்பொன் என்பது இதன் பொருள், இதில் இறுதியில் பொன்னின் நிறையை குறிக்கும் குறியீடும் உள்ளது. இதில் வரும் பாகனூர் முற்கால பாண்டியரின் வேள்விக்குடி செப்பேட்டில் வளம்பொருந்திய ஊராய் கூறப்பட்டுள்ளது. சோழவந்தான் அருகே உள்ளது இவ்வூர். வைகையாற்றின் வளம் பொருந்திய ஊர் இந்த பாகனூர் கூற்றமாகும். இதன்காலம் கி.மு.2ம் நூற்றாண்டாகும்







தமிழி கல்வெட்டுகள்-07 கருங்காலக்குடி தமிழி

தமிழி கல்வெட்டுகள்-07

கருங்காலக்குடி தமிழி:

மதுரை-திருச்சி புறவழிச்சாலையில் இங்குள்ள ஊரகப்பகுதியில் "பஞ்சபாண்டவர் குட்டு" எனும் குன்றில் ஓர்குகைத்தளம் அமைந்துள்ளது, அதன் முகப்பில் தமிழிகல்வெட்டு ஒன்றுள்ளது. குகைத்தளத்தின் பக்கவாட்டில் ஓர் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. அதன் கீழே வட்டெழுத்து கல்வெட்டுள்ளது. அச்சணந்தி என்பவர் இச்சிற்பத்தை செய்தவர் என அக்கல்வெட்டு கூறுகிறது!  அச்சணந்தியும், அவரது தாயார் குணமதியும் தமிழகம் முழுக்க நிறைய தீர்த்தங்கரர் உருவங்களை செய்வித்துள்ளனர். மேலும் இக்குகைத்தளத்தின் மேலே சில கற்படுக்கைகள் காணப்படுகின்றன. அவற்றிலும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இங்கு பாடல் வடிவில் ஓர் கல்வெட்டுள்ளது. பாண்டியனிடம் அமைச்சராய் இருந்த பள்ளத்தரையன் என்பவர் ஓர் கண்ணடை(நீர்நிலை) அமைத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

தமிழி கல்வெட்டு:

"ஏழைய் ஊர் அரிதின் பளிய்"

விளக்கம்:

இக்கல்வெட்டில் பயின்று வரும் நெடில் சொற்களை குறிலாக படித்து பொருள் கொள்ளப்படுகிறது. இதே போன்ற முறை ஆந்திர மாநிலம் பட்டிப்புரோலுவில் கிடைத்த ஈமப்பேழையில் உள்ள பிராமி கல்வெட்டிலும் படிக்கப்பட்டது. ஏழையூர் எனும் ஊரைச்சேர்ந்த அரிதி என்பவர் இப்பள்ளியை அமைத்துக் கொடுத்தவர் என்பது இதன் பொருளாகும். இக்கல்வெட்டு கி.மு.2 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இக்கல்வெட்டு குறித்த காணொளிக்கு:










தமிழி கல்வெட்டுகள்-06

தமிழி கல்வெட்டுகள்-06

கீழவளவு தமிழி:

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கீழவளவு கிராமம். அங்குள்ள "பஞ்சபாண்டவர் மலை" எனப்படும் மலைக்குன்றில் இயற்கையான குகைத்தளம் அமைந்துள்ளது. அந்த குகைத்தளத்தின் கீழே வழவழப்பாக இழைக்கப்பட்ட பல கற்படுக்கைகள் உள்ளன. இக்குகைத்தளத்தின் மேற்பகுதியில் நீர்உட்புகா வண்ணம் ஓர் நீர்வடி வெட்டப்பட்டுள்ளது. அதன்மேலே ஓர் தமிழி கல்வெட்டு காணப்படுகிறது 1906 ம் ஆண்டு வெண்கோபராவால் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்குகைத்தளத்திற்கு பின்புறம் சமணதீர்த்தங்கரர் உருவங்கள் உள்ளது.
இக்கல்வெட்டின் சில எழுத்துகள் நேராகவும், சில தலைகீழாகவும் சில எழுத்துகள் இடம் வலமாகவும் மாறி வெட்டியுள்ளனர். (கல்வெட்டு தகவலை எழுதிகொடுத்த ஓலையை, கல்லில் வெட்டுவோர், தலைகீழாக ஓலையைபிடித்து மாற்றி ஏதும் வெட்டிவிட்டாரோ என தெரியவில்லை)

கல்வெட்டு செய்தி:

உப(ச)அன் தொண்டி (ல) வோன்கொடு பளிஇ

விளக்கம்:

உபசன் எனும் சொல்லை சமயம்சார்ந்த ஆசிரியர் என பொருள் கொள்ளலாம்.இதே உபசன் எனும் சொல் கொங்கர்புளியங்குளம், திருவாதவூர் கல்வெட்டிலும் வருகிறது. பாண்டியநாட்டின் கடற்கரை நகரமாய் விளங்கிய 'தொண்டி' நகரம் 2200 ஆண்டுகள் முன்பே அதே பெயரில் இக்கல்வெட்டிலும் வருவது சிறப்பான ஒன்று. சங்கஇலக்கியமான குறுந்தொகையிலும் தொண்டி நகர் குறித்த குறிப்புகள் உண்டு. பளிஇ என்பதனை பள்ளி என கூறலாம். தொண்டியைச் சேர்ந்த உபசன் என்பவர் கொடுத்த தானம் இப்பள்ளி என்பது இதன் பொருள். தொண்டியிலிருந்து வந்து ஒரு சமயஆசிரியர் இத்தானம் அளித்துள்ளார், செல்வாக்கான மனிதராய் அவர் இருந்திருப்பார் போலும். இக்கல்வெட்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

மேலும் இக்கல்வெட்டை காணொளியாக காண :


தமிழி எழுத்துகள்-05

தமிழி எழுத்துகள்-05

ஐயர்மலை:

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திலுள்ளது ஐயர்மலை. இம்மலையின் உச்சியில் உள்ள குகைத்தளத்தில் உள்ள படுக்கையில் தமிழி கல்வெட்டு ஒன்றுள்ளது. பொதுவாக இம்மாதிரி படுக்கைகள் உள்ள இடங்களை "பஞ்சபாண்டவர்"படுக்ககைள், அல்லது "பஞ்சபாண்டவர் மலை" "ஐவர்மலை" என தமிழகம் முழுவதும் அழைக்கின்றனர். மகாபாரதத்தின் தாக்கம் காரணமாக, இவ்வாறு மக்கள் அழைக்கின்றனர். இன்றும் இவ்வாறான படுக்கைகள் உள்ள இடங்களில் பாண்டவர்கள் வனவாசத்தின்போது தங்கியதாய் கருதுகின்றனர். எனவே இதேபோன்ற மலைகள், படுக்கைகள் உள்ள இடங்களை இவ்வாறு அழைக்கின்றனர்.இதே போன்ற நம்பிக்கையும் தான் ஆஞ்சிநேயரின் சிரஞ்சீவிமலையும்! மூலிகை மலையை பெயர்த்து எடுத்து ஆஞ்சிநேயர் கொண்டுவரும்போது சிதறிய மலைதான் தங்கள் ஊர்மலை என தமிழகத்தில் பல மலைகளை நம் மக்கள் நம்பிக்கையுடன் கூறுவர், அதற்கு காரணம் அம்மலையின் மூலிகைவளம் மற்றும் அதனோடு தொடர்புடைய இராமாயண Mythology!
இதேகதைதான் இந்த ஐயர்மலைக்கும், ஐவர்மலை என்பது மருவி ஐயர்மலை ஆனது. தமிழி கல்வெட்டு அமைந்துள்ள இடங்களில் மிகவும் ஆபத்தான இடம் இம்மலையே. சென்று பார்ப்பதற்கு சரியான பாதை கிடையாது. வழுக்குப்பாறை மற்றும் செங்குத்தான இடத்தில் இக்குகைத்தளம் அமைந்துள்ளது.

கல்வெட்டு:

பனைதுறை வெஸன் அதட்அனம்

விளக்கம்:

பனைத்துறை எனும் இடத்தைச்சேர்ந்த வெஸன் என்பவர் அமைத்துக்குடுத்த இருக்கை என்பது இதன் பொருள்.
முதல்சொல் மட்டுமே இங்கு தமிழ் மற்ற இரண்டு சொல்லும் பிராகிருதம் ஆகும். துறை என்பது நீர்நிலைச்சார்ந்த பகுதியினை குறிக்கும். இம்மலைக்கு அருகே காவிரியாற்று நீர்த்துறை உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே பனைதுறை என்பது காவிரிக்கு அருகேயுள்ள ஊராய் இருக்கும். வெஸ்ஸ எனும் சொல்லினை வைஸ்ய எனும் சொல்லாய் கருதி வணிகன் என்று கருதுகின்றனர். பனைதுறையின் பிரபலமான வணிகனாய் இவர் இருக்கக்கூடும். அதட்அனம் என்பதை அதிட்டானம் என சேர்த்து பொருள் கொள்ளலாம். கி.மு முதல் நூற்றாண்டு என இக்கல்வெட்டு கருதப்படுகிறது!