தமிழி கல்வெட்டுகள்-16

 தமிழி கல்வெட்டுகள்-16


விக்ரமங்கலம் தமிழி


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள ஊர் விக்ரமங்கலம். இங்குள்ள குகைத்தளத்தில் ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளது.


முதல் கல்வெட்டு:


எஇய்ல் அர்இய்தன் சேவித்ஒன்


விளக்கம்:


ஏஇய்ல் எனும் ஊரைச்சேர்ந்த 'ஆரிதன்' செய்வித்தது என்பது இதன் பொருள். 

இக்கல்வெட்டு இங்குள்ள ஒரு குகைத்தளத்தின் விதானத்தில் உள்ளது.


இரண்டாம் கல்வெட்டு:


எம்ஊர் சிழிவன் அதன்தியன்


விளக்கம்:


எம்ஊரௌ அல்லது "ஏமஊர்"ரை சேர்ந்த சிழிவன் அதன்தியன் என்பவர் இங்கு தானமளித்துள்ளார்.  சிழிவன் எனும் பெயர் அரிட்டாப்பட்டியிலும் தியன் எனும் சொல் புலிமான்கோம்பை நடுகல்லிலும் பயின்று வருகிறது!

இக்கல்வெட்டு பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது


மூன்றாம் கல்வெட்டு:


அந்தைய் பிகன் மகன் வெந்அதன்


விளக்கம்:


அந்தைய் பிகன் என்பவருடைய மகன் அளித்த தானம் என்பதோ இதன் பொருள்.

இக்கல்வெட்டு படுக்கை ஒன்றின் தலைப்பகுதியில் உள்ளது.


நான்காம் கல்வெட்டு:


பேதலை குவிரன்


விளக்கம்:


பேத்தலை எனும் ஊரினை சேர்ந்த "குவிரன்" என்பவரால் இப்படுக்கை வெட்டப்பட்டுள்ளது.

முதல் கல்வெட்டுக்கு அருகேயுள்ள படுக்கையில் இக்கல்வெட்டு உள்ளது. இதில் பயின்று வரும் குவிரன் எனும் பெயர் கீழடி மற்றும் இன்னும்பிற தமிழி கல்வெட்டுகளில் வருகிறது!


ஐந்தாம் கல்வெட்டு:


செங்(கு)விரன்


விளக்கம்:


செங்குவிரன் என்பவரால் இப்படுக்கை வெட்டப்பட்டுள்ளது.

படுக்கையொன்றின் முகப்பில் இக்கல்வெட்டு உள்ளது.


ஆறாம் கல்வெட்டு:


கு(வி)ரதன்


விளக்கம்:


குவிரதன் என்பவரால் இப்படுக்கை ஏற்டுத்தப்பட்டுள்ளது.


இக்கல்வெட்டுகள் அனைத்தும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் வெட்டப்பட்டுள்ளது! இம்மலைத்தொடர் பாண்டிய-சேர கணவாய் பகுதியில் அமைந்துள்ளது. முதன்முதலாய் இக்கல்வெட்டு 1923 ல் கண்டறியப்பட்டது.


மூன்றாம் கல்வெட்டு 
முதல் கல்வெட்டு 


நான்காம் கல்வெட்டு 
ஐந்தாம் கல்வெட்டு 


இரண்டாம் கல்வெட்டு 
முதல் கல்வெட்டு 


தமிழி எழுத்துகள்:15

 தமிழி எழுத்துகள்:15


நடுமுதலைக்குளம் தமிழி:


மதுரைமாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் எனும் ஊரின் அருகே அமைந்துள்ளது நடுமுதலைக்குளம் எனும் ஊர். இங்கு இயற்கையாய் அமைந்த இரு குகைத்தளங்கள் காணப்படுகிறது. அவற்றுள் முதலாவது குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டும், தொல்மாந்தர்கள் வரைந்த பாறைஓவியங்களும் காணப்படுகிறது!  எழுத்துகள் நல்ல பெரிய அளவில் 10 செ.மீ அகலத்திலும் வெட்டப்பட்டுள்ளது! 


கல்வெட்டு:


வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்


விளக்கம்:

வேம்பிற்றூர் எனும் ஊரினரால் இந்த பெரியகுளம் வெட்டப்பட்டது என்பது இதன் பொருள்."அயம்" எனும் சொல்லிற்கு குளம், சுனை, நீர்நிலை என அகராதிகள் பொருள் தருகின்றது. பேர் அயம் என்பதனை பெரியகுளம் என கூறலாம். இன்றும் இவ்வூர் "முதலைக்குளம்" என்று நீர்நிலையின் பெயராலேயே அழைக்கப்படுவது நோக்கத்தக்கது. இவ்வூரின் அருகே 2 கி.மீ சுற்றளவில் ஒரு பெரியகுளம் இன்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த குளத்தைதான் கல்வெட்டு குறிப்பிடும் "பேர் அயம்" என கருதப்படுகிறது! 


வேம்பிற்ஊரின் சிறப்பு:


புறநானூறு மற்றும் குறுந்தொகையில் வெம்பில் ஊர் என ஒரு ஊரினை புகழ்ந்து பாடப்பாடுகிறது,அவ்வூர் இக்கல்வெட்டில் வரும் ஊராய் இருக்கலாம். திருச்சி மேலைக்கோட்டையில் காணப்படும் சிராப்பள்ளி அந்தாதி பாடிய ''வேம்பையர் கோன் நாராயண்" மற்றும் நின்றசீர் நெடுமாறனை புகழ்ந்துபாடும் பழம்பெரும் மதுரைகோவையை பாடிய சங்கரநாரயணரும் வேம்பியூரை சேர்ந்தவரே. சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் வேம்பையூர் என்ற ஊர் உள்ளது. அவ்வூரே இக்கல்வெட்டில் பயின்று வரும் ஊராய் இருக்கலாம்.


இக்கல்வெட்டு கி.மு.2ம் நூற்றாண்டை சேர்ந்தது.