பொற்பனைக்கோட்டை தமிழி

 பொற்பனைக்கோட்டை தமிழி:


கடந்த நூற்றாண்டுவரை குகைத்தளங்களில் மட்டுமே தமிழி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை கர்நாடகத்திலிருந்து வந்த சமணர்களால் நமக்கு அளிக்கப்பட்ட கொடையே இத்தகைய எழுத்துருக்கள், என பரவலாய் நம்பப்பட்டு வந்தது. இதற்கு நேர்மாறாய் நமது சங்க இலக்கியங்கள் நம் ஊரிலுள்ள நடுகற்களில் எழுத்து பொறிப்பு இருந்ததாக கூறியது. ஆனால் இலக்கியம் கூறும் இந்த செய்தியை நிரூபிக்கும் வண்ணம் பண்டைய எழுத்துபொறிப்புடைய நடுகல் கிடைக்காமல் இருந்தது. சங்க இலக்கியங்களையே ஏதோ வட்டார வழக்குபாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் அவை வரலாற்று ஆவணம் அல்ல, காலத்தால் பிற்ப்பட்டவை என்றரீதியில் கிளப்பிவிடப்பட்டது.


இக்கூற்றுகளை பொய்யாகச்செய்ய சங்ககாலத்தை சேன்ற மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் ஒன்றை நேற்று கண்டோம். இன்று இரண்டாம் நடுகல்லான பொற்பனைக்கோட்டை நடுகல் குறித்து காண்போம்.


தொல்லியல்கழகமான ஆவணம் அமைப்பின் பேராசிரியர் முனைவர் சு.ராஜவேலு மற்றும் அவரது ஆய்வு மாணவர்கள் த.தங்கதுரை , சா.பாண்டியன்,ஆ.மோசஸ் குழுவினரால் அடையாளங் காணப்பட்டதுபொற்பனைக் கோட்டை நடுகல்.


கல்வெட்டு வாசகம்:


1.கோவென்கட்டிற் நெதிர 

2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்

3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு

4) அங்கபடை தாணைத் தணயன் கணங்

5) குமாரன் கல்


கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டுள்ளது.


சங்க இலக்கியத்தில் இம்மன்னர் பற்றி குறிப்பில்லையெனினும், இங்கு மிகப்பெரிய கோட்டை இருந்துள்ளது. அதன் எச்சம் இப்பகுதியில் இன்றும் உள்ளது. 

இவ்வூருக்கு செல்லும் வழியில் இன்றும் "கொங்கதிரையன்பட்டி" எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.



காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு

 காலத்தால் முற்பட்ட தமிழிக் கல்வெட்டு :

புலிமான் கோம்பை கல்வெட்டுகள்

அசோகனே இன்றைய இந்திய எழுத்துருக்கு வித்திட்டவர், அவரது வழியில் தோன்றியதே இன்றைய இந்திய நவீன எழுத்துகள், எனும் கூற்றை உடைத்து, அவருக்கு 200 வருடம் முன்பே இங்கே எளிய மக்களும் எழுத்தறிவை பெற்றிருந்தனர், என்பதனை உணர்த்தி காட்டிய கல்வெட்டுகள் இவை. காலத்தால் முந்தைய இந்திய கல்வெட்டும் இதுவே.


வரலாற்றுச் சிறப்புமிக்க புலிமான் கோம்பை கல்வெட்டுகளை இன்று காண நேர்ந்தது. இக்கல்வெட்டுகளைக் கண்டெடுக்கும் வரையில்  முதல் தமிழிக் கல்வெட்டாக சங்ககாலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டைக் கருதி வந்தனர். ஆனால் 2006 ல்  தேனிமாவட்டத்திலுள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டுகள் பொஆமு 4 ம் நூற்றாண்டு வரை பழமையானது என கருதப்படுகிறது.


இக்கல்வெட்டுகள் தமிழ்பல்கலைகழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறையைச் சார்ந்த யத்தீஸ்குமார் மற்றும் பாலமுருகன் தலைமையில் கண்டறியப்பட்டது. பொதுவாய் கருதப்படும் பொஆமு 3 ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழகத்தில் தமிழி இருந்து வந்துள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகள் ஒரு சான்றாகும்.


#முதல்_கல்வெட்டு


'.. அன் ஊர் அதன்


..ன் அன் கல் '


என்று சிதைந்துள்ளது முதல்கல்வெட்டு. ஒரு ஊரைச் சார்ந்த ஒருவருக்கு எடுக்கப்பட்ட கல் என்ற இதற்குப் பொருளுரைக்கின்றனர்.


#இரண்டாம்_கல்வெட்டு


'வேள் ஊர் அவ்வன் பதவன்'


என்றுள்ளது இரண்டாம் கல்வெட்டு. இதில் வேள் என்பது சங்ககால வேளிர் ஆண்ட ஊரை குறிக்கும் பொருளில் உள்ளது. இதில் வேள்ஊரை சார்ந்த பதவன் மகனாகிய அவ்வனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்ற பொருள் தருகிறது.


#மூன்றாவது_கல்வெட்டு


'கல்


பேடு தீயன் அந்தவன்


கூடல் ஊர் ஆகோள்'


என்றுள்ளது மூன்றாம் கல்வெட்டு. சங்கப்பாடலில் வரும் ஆநிரை கவர்தலே இங்கு 'ஆகோள்' என்று சுட்டப்படுகிறது. கூடலூரில் நடந்த இவ்வாநிரை கவர்தல் போரில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்ற வீரனுக்கு எடுப்பித்த நடுகல் இது. இக்கல்வெட்டுகள் இன்று தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டியல் துறையில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளன.