பொற்பனைக்கோட்டை தமிழி

 பொற்பனைக்கோட்டை தமிழி:


கடந்த நூற்றாண்டுவரை குகைத்தளங்களில் மட்டுமே தமிழி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை கர்நாடகத்திலிருந்து வந்த சமணர்களால் நமக்கு அளிக்கப்பட்ட கொடையே இத்தகைய எழுத்துருக்கள், என பரவலாய் நம்பப்பட்டு வந்தது. இதற்கு நேர்மாறாய் நமது சங்க இலக்கியங்கள் நம் ஊரிலுள்ள நடுகற்களில் எழுத்து பொறிப்பு இருந்ததாக கூறியது. ஆனால் இலக்கியம் கூறும் இந்த செய்தியை நிரூபிக்கும் வண்ணம் பண்டைய எழுத்துபொறிப்புடைய நடுகல் கிடைக்காமல் இருந்தது. சங்க இலக்கியங்களையே ஏதோ வட்டார வழக்குபாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் அவை வரலாற்று ஆவணம் அல்ல, காலத்தால் பிற்ப்பட்டவை என்றரீதியில் கிளப்பிவிடப்பட்டது.


இக்கூற்றுகளை பொய்யாகச்செய்ய சங்ககாலத்தை சேன்ற மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டது. அவற்றில் ஒன்றை நேற்று கண்டோம். இன்று இரண்டாம் நடுகல்லான பொற்பனைக்கோட்டை நடுகல் குறித்து காண்போம்.


தொல்லியல்கழகமான ஆவணம் அமைப்பின் பேராசிரியர் முனைவர் சு.ராஜவேலு மற்றும் அவரது ஆய்வு மாணவர்கள் த.தங்கதுரை , சா.பாண்டியன்,ஆ.மோசஸ் குழுவினரால் அடையாளங் காணப்பட்டதுபொற்பனைக் கோட்டை நடுகல்.


கல்வெட்டு வாசகம்:


1.கோவென்கட்டிற் நெதிர 

2.ணாறு பொன்கொங்கர் விண்ண கோன்

3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு

4) அங்கபடை தாணைத் தணயன் கணங்

5) குமாரன் கல்


கோ வென்கட்டி என்பவர் காலத்தில் பொன்கொங்கர் விண்ணக்கொன் பசுக்கூட்டத்தை கவர அதவ்வன் என்பவருடைய மெய்க்காவல் படைத் தலைவனும் கோட்டையின் காவலருமாகிய “அங்கப்படை தாணையன் கணங்குமரன்” இறந்துபட்ட மைக்காக இந்த நடுகல் நட்டுவிக்கப்பட்டுள்ளது.


சங்க இலக்கியத்தில் இம்மன்னர் பற்றி குறிப்பில்லையெனினும், இங்கு மிகப்பெரிய கோட்டை இருந்துள்ளது. அதன் எச்சம் இப்பகுதியில் இன்றும் உள்ளது. 

இவ்வூருக்கு செல்லும் வழியில் இன்றும் "கொங்கதிரையன்பட்டி" எனும் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment