தமிழி எழுத்துகள்:15
நடுமுதலைக்குளம் தமிழி:
மதுரைமாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் எனும் ஊரின் அருகே அமைந்துள்ளது நடுமுதலைக்குளம் எனும் ஊர். இங்கு இயற்கையாய் அமைந்த இரு குகைத்தளங்கள் காணப்படுகிறது. அவற்றுள் முதலாவது குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டும், தொல்மாந்தர்கள் வரைந்த பாறைஓவியங்களும் காணப்படுகிறது! எழுத்துகள் நல்ல பெரிய அளவில் 10 செ.மீ அகலத்திலும் வெட்டப்பட்டுள்ளது!
கல்வெட்டு:
வேம்பிற்ஊர் பேர் அய்அம் சேதவர்
விளக்கம்:
வேம்பிற்றூர் எனும் ஊரினரால் இந்த பெரியகுளம் வெட்டப்பட்டது என்பது இதன் பொருள்."அயம்" எனும் சொல்லிற்கு குளம், சுனை, நீர்நிலை என அகராதிகள் பொருள் தருகின்றது. பேர் அயம் என்பதனை பெரியகுளம் என கூறலாம். இன்றும் இவ்வூர் "முதலைக்குளம்" என்று நீர்நிலையின் பெயராலேயே அழைக்கப்படுவது நோக்கத்தக்கது. இவ்வூரின் அருகே 2 கி.மீ சுற்றளவில் ஒரு பெரியகுளம் இன்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த குளத்தைதான் கல்வெட்டு குறிப்பிடும் "பேர் அயம்" என கருதப்படுகிறது!
வேம்பிற்ஊரின் சிறப்பு:
புறநானூறு மற்றும் குறுந்தொகையில் வெம்பில் ஊர் என ஒரு ஊரினை புகழ்ந்து பாடப்பாடுகிறது,அவ்வூர் இக்கல்வெட்டில் வரும் ஊராய் இருக்கலாம். திருச்சி மேலைக்கோட்டையில் காணப்படும் சிராப்பள்ளி அந்தாதி பாடிய ''வேம்பையர் கோன் நாராயண்" மற்றும் நின்றசீர் நெடுமாறனை புகழ்ந்துபாடும் பழம்பெரும் மதுரைகோவையை பாடிய சங்கரநாரயணரும் வேம்பியூரை சேர்ந்தவரே. சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் வேம்பையூர் என்ற ஊர் உள்ளது. அவ்வூரே இக்கல்வெட்டில் பயின்று வரும் ஊராய் இருக்கலாம்.
இக்கல்வெட்டு கி.மு.2ம் நூற்றாண்டை சேர்ந்தது.





No comments:
Post a Comment